வெங்கமேடு அருகே வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது

கரூர் : கரூர் வெங்கமேடு அருகே ஒற்றைக்குழல் துப்பாக்கி மூலம் வன உயிரினங்களை வேட்டையாடிய நபரை மாவட்ட வனச்சரக அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் வெங்கமேடு மற்றும் அருகம்பாளையம் பகுதியில் ஒற்றைகுழல் துப்பாக்கி மூலம், அரிய வகை உயிரினங்களை ஒருவர் வேட்டையாடுவதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கரூர் அரசு காலனி பகுதியை சேர்ந்த திருப்பூர்சிங் (45) என்பவர், தன்னிடம் உள்ள உரிமம் பெற்ற ஒற்றைக் குழல்துப்பாக்கி மூலம் உயிரினங்களை வேட்டையாடியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை, கரூர் தாந்தோணிமலை பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து, வனச்சரக அலுவலர் தண்டபாணி உட்பட அனைவரும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒற்றைக் குழல் துப்பாக்கி மூலம் மரநாய் 1, முயல் 3, கவுதாரி 2, கொக்கு 1, பூனை 2 ஆகிய வன உயிரினங்களை வேட்டியாடியது தெரியவந்ததோடு, அவைகளை பறிமுதல் செய்து, திருப்பூர் சிங்கை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: