கொடைரோடு அருகே பராமரிப்பின்றி கிடந்தது ரூ.62 லட்சத்தில் பொலிவு பெறும் அரண்மனைக்குளம்-விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

நிலக்கோட்டை : கொடைரோடு அருகே 25 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பின்றி கிடந்த அரண்மனைக்குளத்தை ரூ.62 லட்சத்தில் பொதுப்பணித்துறையினர் புதுப்பித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொடைரோட்டை அடுத்த சிறுமலை அடிவாரம் ராஜதானிகோட்டையில் உள்ளது அரண்மனைக்குளம். பொதுப்பணி துறையினருக்கு சொந்தமான இந்த குளம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மிகவும் பழமையான அரண்மனைக் குளத்தில் சிறுமலையிலிருந்து வரும் தண்ணீர் சேர்ந்து அழகுமிளிர காட்சியளிப்பது வழக்கம். இந்த நிலை பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. சுமாராக 25 ஆண்டுகளுக்கு மேல் இக்குளத்திற்கான நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு வரத்து வாய்க்கால்கள் முற்றிலும் தூர்ந்து போய் பல்வேறு இடங்களிலும் அடைப்பு ஏற்பட்டதே காரணம் என தெரியவந்தது.

இந்த வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல், பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டது, இதனால் இக்குளத்தில் தண்ணீர் வந்து சேர்வது கேள்விக்குறியானது. இதன் எதிரொலியாக இந்த அரண்மனைக்குளத்தினால் பயனடைந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது. இதனால் அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்துவரும் தொடர் மழையிலும் இந்த அரண்மனைக்குளத்திற்கு தண்ணீர் வந்துசேரவில்லை. இதனால் தற்போதும் அது வறண்ட நிலையில் காட்சியளித்து வருகிறது.இந்த கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரண்மனைக்குளத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின் இந்த குளத்தை சீரமைப்பது மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதன்படி ரூ.62 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ள முடிவானது. இதுகுறித்து பரிந்துரை செய்யப்பட்டு அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டது.

இதையடுத்து அரண்மனைக்குளம் மற்றும் அதற்கான நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணிகளை விரைவாக ஆய்வு செய்து மதிப்பீடு தயாரித்து பொதுப்பணித்துறையினர் பணிகளை துவக்கியது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, குளம் முழுவதும் இருந்த முட்புதர்களை அகற்றி, குளத்தை ஆழப்படுத்தி, நான்கு கரைகளையும் உயர்த்தி பலப்படுத்தி, தண்ணீரை அதிகம் தேக்கிவைக்கும் வகையில் குளத்தைச் சுற்றிலும் காங்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த குளத்தின் கரைகளை வலுப்படுத்தும் வகையில் அதன் உட்பகுதியில் கருங்கற்களை அடுக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை அடுத்து குளத்திற்கான நீர்வரத்து கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படும். இந்த பணிகள் நிறைவடைந்த பின் அரண்மனைக்குளம் புதுப்பொலிவு பெறும். இதன் வாயிலாக இக்குளத்தின் நீராதாரத்தை நம்பியிருந்த இப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுவதாக இருக்கும் என்றனர். தங்கள் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரண்மனைக்குளம் சீரமைப்பு பணிகளை துவக்கி பொதுப்பணித்துறையினர் விறுவிறுப்பாக நடத்தி வருவது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: