பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

சென்னை: தமிழக காவல்துறை சார்பில் தேசிய அளவிலான மகளிர் சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி ஜூன் 15ம் தேதி தொடங்கி ஜூன் 20ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் ஒக்கிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.  தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 454 பெண் போலீசார் பங்கேற்கின்றனர். 13 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதன் தொடக்க விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக பெண் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்றுக் கொண்டார். வெள்ளை நிற பலூன்களையும், வெள்ளை புறாக்களையும் பறக்கவிட்டு போட்டியை தொடக்கி வைத்தார். விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் பேசியதாவது:

தமிழகத்தில் பெண் காவலர்கள் பிரிவு தொடங்கப்பட்டு 50ஆவது ஆண்டு விழாவை கடந்த மார்ச் மாதம் கொண்டாடும் வேளையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான் நாட்டிலேயே முதல்முறையாக பெண் காவலர்களுக்கான தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாடு காவல்துறை, அத்துறையில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில் முன்னிலையில் இருந்து வருகிறது.

தமிழக காவல்துறையில் பணியாற்ற கூடிய காவலர்கள் எண்ணிக்கையில் 21 சதவீதம் பேர் மகளிர் என்பது மிகவும் பெருமை. குறிப்பாக 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் போலீசார் தமிழக காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பு முதல் கடைநிலை வரை பணியாற்றி வருகிறார்கள்.. இவ்வாறு பேசினார். விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: