ஒரு கி.மீ. தூரத்தில் வீடு இருந்தாலும் பள்ளியில் காலியிடம் உள்ளதால் மாணவிகளை சேர்க்க வேண்டும்; கட்டாய கல்வி சேர்க்கை வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவையை சேர்ந்த இளங்கோ என்பவர் அவரது மகளுக்கு கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை கோரி தனியார் பள்ளிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இளங்கோவின் வீடு அமைந்துள்ளதாக கூறி அவரது மகளுக்கு சேர்க்கை வழங்க மறுப்பு தெரிவித்தது. இதேபோல, கோவையை சேர்ந்த தீபக் என்பவரது மகளுக்கும் இதே காரணத்தைக் கூறி பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் டி.முத்து ஆஜரானார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சார்பில் அரசு வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் ஆஜராகி, பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இரு மாணவிகளின் சேர்க்கை விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி மனுதாரர்கள் இருவரையும் 20ம் தேதி பள்ளி நிர்வாகத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். இவர்களின் மாணவர் சேர்க்கையை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post ஒரு கி.மீ. தூரத்தில் வீடு இருந்தாலும் பள்ளியில் காலியிடம் உள்ளதால் மாணவிகளை சேர்க்க வேண்டும்; கட்டாய கல்வி சேர்க்கை வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: