பணியிடங்களில் பாலியல் தொல்லை மறைமுகமான சமூக பிரச்னை பெண்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது

* போலீஸ் அலுவலக கண்காணிப்பாளர் மீதான வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை: பாலியல் தொல்லை, பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கச் செய்கிறது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகனகிருஷ்ணனுக்கு எதிராக விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய விசாகா குழு, மோகன கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். துறைரீதியான விசாரணை முடியும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தால் அவரை நீலகிரி மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்தில் பணியமர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை எதிர்த்து மோகனகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, `பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுகமான சமூக பிரச்னையாகவும் உள்ளது. பாலியல் தொல்லை, பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கச் செய்கிறது. இதனால் பெண்கள் வேலையில் இருந்து விலகவும் அவர்களுக்கு அழுத்தம் தருகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அங்கு பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், நிறுவனங்களின் பணி ஆற்றல் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, மோகனகிருஷ்ணன் தரப்பில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தை விசாகா குழு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பளித்து மீண்டும் முறையாக விசாரித்து 60 நாளில் அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி மோகனகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு, நான்கு வாரங்களில் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த முடிவை அரசு எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

The post பணியிடங்களில் பாலியல் தொல்லை மறைமுகமான சமூக பிரச்னை பெண்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: