குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி

சென்னை: குவைத் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட அவர்களின் உடல்கள் குவைத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் கொச்சி வந்தடைந்தது. அங்கிருந்து 7 தமிழர்களின் உடல்களும் தமிழக அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, சென்னை ராயபுரம் பனைமரத் தொட்டி கார்ப்பரேஷன் காலனியைச் சேர்ந்த சிவசங்கரும் (48) இறந்தவர்களில் ஒருவர் என்பதால் அவரது உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொண்டுவரப்பட்டது.

சிவசங்கரின் உடலை பார்த்ததும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். சிவசங்கரின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்து ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று சிவசங்கரின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து காலை 9 மணி அளவில் சிவசங்கரின் உடல் காசிமேடு சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சிவசங்கரின் மனைவி ஹேமகுமாரிடம் வழங்கினர்.

The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி appeared first on Dinakaran.

Related Stories: