விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் சி.அன்புமணி: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என்று டாக்டர் ராமதாஸ் நேற்று அறிவித்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைவை அடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் நடக்கிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் பாஜக, பாமக போட்டியிட விரும்பம் தெரிவித்து இருந்தது. இதனால், இந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக போட்டியிடும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்தார்.

தொடர்ந்து பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை டாக்டர் ராமதாஸ் நேற்று அறிவித்தார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக மாநில துணை தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் சி.அன்புமணி: ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: