அழகர்கோவில் நிலத்தை விற்க முயற்சி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி கொடைக்கானல் பாஜ தலைவர் கைது: விருதுநகர் போலீசார் அதிரடி

கொடைக்கானல்: அழகர்கோவில் நிலத்தை தங்களுடையது என்று கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த கொடைக்கானல் நகர பாஜ தலைவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சூலக்கரையை சேர்ந்தவர் நல்லசாமி மனைவி ரங்கநாயகி. இவரது தம்பி சூரிய நாராயணன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை வாங்கி ரங்கநாயகி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் கொடைக்கானல் நகர பாஜ தலைவர் சதீஷ்குமார் (37), இவரது தந்தை பத்மநாதன் மற்றும் உறவினர்கள் ரங்கநாயகியை அணுகி தங்களிடம் மதுரை வண்டியூர் பகுதியில் 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் உள்ளது என்றும் இதற்கான பவர் பத்திரம் பத்மநாதன் பெயரில் உள்ளது என்றும் கூறினர். பத்மநாதன் தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஆறு பேரும் ரங்கநாயகியிடம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து விலை பேசி அட்வான்ஸ் தொகை என ரூ.50 லட்சம், பத்திரப்பதிவுக்கு ரூ.20 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால், நிலத்தை பதிவு செய்து கொடுக்காததால், கடந்த 20.9.2021ல் திண்டுக்கல் மாவட்டம் பழநி சிவகிரிபட்டியில் உள்ள பத்மநாபன் வீட்டிற்கு, சகோதரர் மற்றும் மகன்களுடன்  ரங்கநாயகி சென்றுள்ளார். இவர்களுக்கு பத்மநாதன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மதுரை சரக டிஐஜி உள்ளிட்டோரிடம் ரங்கநாயகி  புகார் செய்துள்ளார். இதற்கிடையே ரங்கநாயகியிடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி சதீஷ்குமார் குழுவினர் காட்டிய நிலம் மதுரை அருகே அழகர்கோவில் திருக்கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதது தொடர்பாக பாஜ நிர்வாகி சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது ரங்கநாயகி புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுரையில் இருந்த சதீஷ்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: