கேரள இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து பாலியல் துன்புறுத்தல்: வாலிபர் கைது

நாகர்கோவில்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வெள்ளத்தூவல் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் 20 வயது மகள் கடந்த 16.12.2021 அன்று மாயமானார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் இவர் இரவில் வீடு திரும்பி விடுவார். ஆனால் சம்பவத்தன்று யாரிடமும் எதுவும் சொல்லாமல் சென்றவர் திரும்பி வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் கேரள மாநிலம் வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி இளம்பெண் மாயம் என போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நீண்ட தேடுதலுக்கு பின்பு மாயமான இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் வாலிபர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நாகர்கோவிலுக்கு பஸ்சில் அழைத்து வந்து மீனாட்சிபுரத்தில் லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன் பேரில் சம்பந்தப்பட்ட லாட்ஜில் போலீசார் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுந்தர நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித் கிளின்டன் (25) என்பவர் தான் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அஜித் கிளின்டனை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: