தந்தை இறந்தது தெரியாத வீராங்கனை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்: வீடியோகாலில் தந்தை உடலை பார்த்து கதறிய பரிதாபம்

பட்டுக்கோட்டை: தந்தை இறந்தது தெரியாத வீராங்கனை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். செல்போனில் தந்தை உடலை பார்த்து கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வமுத்து (50) பெயிண்டர். இவரது மனைவி ரீட்டாமேரி (42). இவர்களுக்கு லோகப்பிரியா (22), பிரியதர்ஷினி (19), பிரியங்கா (14) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். கூலித்தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்த லோகப்பிரியா எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், ஆசிய மற்றும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில் முதல் முறையாக நியூசிலாந்த் நாட்டில் ஆக்லாண்ட்டில் தற்போது நடைபெற்று வரக்கூடிய காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் சென்று கலந்து கொண்ட லோகப்பிரியா, 52 கிலோ உடல் எடைப்பிரிவில் ஜூனியர் பிரிவில் 350 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இத்தகவலை லோகப்பிரியா, வாட்ஸ்அப் மூலமாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2மணிக்கு நியூசிலாந்தில் நடந்தது.

இந்நிலையில் லோகப்பிரியாவின் தந்தை செல்வமுத்து, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுக்கா கள்ளுக்காரன்பட்டியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார். இந்த செய்தியை லோகப்பிரியாவுக்கு உடனடியாக தெரிவித்தால் அவர் மிகவும் சிரமப்படுவதோடு, ரூ.3 லட்சம் வரை ஸ்பான்சர் வாங்கி நியூசிலாந்துக்கு சென்று பதக்கம் வெல்வது வீணாகிவிடுமே என்ற எண்ணத்தில் அவர் தங்கப்பதக்கம் வாங்கிய காட்சியை வாட்ஸ்அப்பில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்தனர்.

பின்னர் தந்தை இறந்துபோன செய்தியை லோகப்பிரியாவிற்கு, அவரது சித்தப்பா செல்வக்குமார் வீடியோகாலில் தெரிவித்தார். இத்தகவலை கேட்டதும் லோகப்பிரியா கதறி அழுதார். மேலும் வீடியோகாலில் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. நியூசிலாந்தில் உள்ள லோகப்பிரியா கூறுகையில், தங்கப்பதக்கம் வாங்கிய சந்தோஷம் 5 நிமிடம் கூட இல்லையே. நான் நியூசிலாந்து செல்வதை அப்பாவிடம் சொல்லவில்லை.

வாங்க பதக்கத்தை வீடியோகாலில் காட்டி அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று ஆசை ஆசையாக இருந்தேன். இனி எப்படி நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளப்போகிறேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மத்திய அல்லது மாநில அரசு வேலை வாய்ப்பு கொடுத்தால் என்னுடைய குடும்பத்தை நான் காப்பாற்ற முடியும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இச்சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை தாலுக்காவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: