பாதுகாப்பு பிரிவு போலீஸ் என்று பொய் சொல்லி முதல்வரை பார்க்க சபாரி டிரஸ்சில் சென்ற சிறை காவலர் கைது: அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தார்.  இதனால், அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு கட்சியின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சபாரி உடையில் போலீஸ் போல் ஒருவர் தனது நண்பருடன் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யார் என்று கேட்டதற்கு ‘நான் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள போலீஸ்’ என்று அதற்கான அடையாள அட்டையை காட்டியுள்ளார். இதனால் போலீசார் அவரை விட்டுள்ளனர். பிறகு சபாரி உடையில் வந்த நபர், தனது நண்பரை அறிவாலயத்தில் நிகழ்ச்சி நடக்கும் கலைஞர் அரங்கம் முன்பு நிறுத்திவிட்டு, தனியாக ஆலோசனை நடந்த பகுதிக்கு சென்றுள்ளார்.

இதை கவனித்த முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சபாரி உடையில் வந்த நபரை மறித்து யார் என்று கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது, நான் பொள்ளாச்சி கிளை சிறையில் வார்டனாக இருக்கிறேன், முதல்வருடன் புகைப்படம் எடுக்க வந்துள்ளேன் எனக்கூறி, காவல்துறைக்கான அடையாள அட்டையை காண்பித்துள்ளார். உடனே சபாரி உடையில் இருந்த நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கனியிடம் ஒப்படைத்தனர்.அதன்படி போலீசார் பிடிபட்ட நபர் மற்றும் அவரது நண்பரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கோவை ரேஸ்கோர்ஸ் குடியிருப்பை சேர்ந்த வசந்தகுமார் (42) என்றும், பொள்ளாச்சியில் உள்ள கிளை சிறையில் வார்டனாக பணியாற்றி வருவதும், கடந்த 2002ம் ஆண்டு சிறை காவலராக பணிக்கு சேர்ந்து தற்போது வார்டனாக இருப்பதும் தெரியவந்தது.

மேலும், தனது நண்பர் நாட்ராயனுடன் நேற்று முன்தினம் அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் அவரது வீட்டில் போட்டோ எடுத்துள்ளார். அப்போது, முதல்வர் அண்ணா அறிவாலயம் வருவதை அறிந்த வசந்தகுமார், தனது நண்பருடன் அண்ணா அறிவாலயம் வந்து போலியாக தயாரித்த காவல்துறைக்கான அடையாள அட்டையை காண்பித்து கூட்டம் நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், காவல் துறை அடையாள அட்டையை போலியாக தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காவல்துறைக்கான போலி அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: