பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வழக்கு: கூட்டுறவுத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை விவசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில், கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2017 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

 அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, பரிசுத் தொகுப்பிற்கு உரிய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பலனளிக்கும்.

எனவே, பொங்கல் பரிசு தொகுப்பிற்குரிய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ெஜ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுத்து அரசுத் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மனுதாரர் யூகத்தின் அடிப்படையில் முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடியுள்ளார். தனிப்பட்ட நோக்கத்திற்காக மனு செய்துள்ளதாகத் தெரிகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு தமிழக கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: