34 பேரை பலி கொண்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை குறித்து கவர்னருடன் அமைச்சர் ரகுபதி சந்திப்பு: சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர். இதனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து 34 பேருக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்த, சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த 25ம் தேதி நேரம் கேட்டிருந்தார். இதையடுத்து, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியை நேற்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்க கவர்னர் ஆர்.என்.ரவி நேரம் கொடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அவருடன் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரும் உடன் சென்றனர்.

தமிழக கவர்னர் மற்றும் சட்ட அமைச்சர் ரகுபதியுனான சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்ட மசோதா குறித்தும், அதில் கவர்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்தும் நேரில் விளக்கம் அளித்தார். மேலும், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கடந்த 27ம் தேதியுடன் காலாவதியானதால், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான நிரந்தர சட்ட மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துவிட்டு வெளியே வந்த சட்ட அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: நானும், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் கவர்னரை இன்று (நேற்று) அவரது மாளிகையில் சந்தித்தோம். இணையவழி ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் மற்றும் ஒழுங்குமுறைபடுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு ஒப்புதல் தருவது பற்றி கவர்னர் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கிறோம். இன்றைக்கும் கவர்னரிடம் அதுபற்றிய விளக்கங்களை அரைமணி நேரம் சந்தித்து தந்திருக்கிறோம். கவர்னரும், அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. முதலமைச்சரிடம் சொல்லுங்கள், விரைந்து அதில் எனது முடிவை தருகிறேன் என்று கவர்னர் சொல்லி இருக்கிறார்.

அவசர சட்டத்துக்கும் இந்த சட்டத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவசர சட்டம் இயற்றப்பட்டபோது ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 17ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது என்று கவர்னரிடம் கூறியுள்ளோம். நேரடியாக (ஆப்லைன்) விளையாடும்போது யாரும் தற்கொலை செய்து கொண்டதாக பட்டியல் எங்களுக்கு கிடையாது. எனவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அதனால் 34 உயிர்களை குறுகிய காலத்தில் நாம் இழந்திருக்கின்றோம். அதனால் வல்லுர்கள் கொடுத்துள்ள அறிக்கையையும் எங்களது முகப்புரையில் சொல்லி இருக்கிறோம்.

இப்போது 34 உயிர்கள் ஆன்லைன் ரம்மியினால்தான் இழந்திருக்கின்றோம். எனவே ஆப்லைனுக்கும், ஆன்லைனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆன்லைனில் புரோகிராம் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து, பணத்தை கொள்ளையடித்து விடுவார்கள். அதனால் மக்களுடைய பணம் பறிபோகிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், இன்று பலருக்கு எஸ்எம்எஸ் வருகிறது. ஆன்லைனில் வந்து விளையாடுங்கள், உங்களுக்கு ரூ.8 ஆயிரம் தந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதை நம்பி விளையாட போகிறார்கள்.

போனால் ரூ.8 லட்சத்தை இழந்துவிட்டு வந்து, அந்த குடும்பம் ரோட்டில் நிர்கதியாக நிற்கிறது. எனவே, கூடிய விரைவில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அதனால், விரைவில் சட்ட மசோதாவை பரிசீலனை செய்து அனுமதி தர வேண்டும் என்று தமிழக கவர்னரை முதலமைச்சர் சார்பில் கேட்டுக் கொண்டோம். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அமலுக்கு வரும்.

இந்த சட்ட மசோதா மீது சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை தெளிவுபடுத்திவிட்டு ஒப்புதல் தருகிறேன் என்று கவர்னர் கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

* 21 மசோதாக்கள் நிலுவை

இதுவரை 21 மசோதாக்கள் தமிழக கவர்னரிடம்  நிலுவையில் இருக்கிறது. இந்த காலத்துக்குள் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும் என்று காலநிர்ணயம் எதுவும் கிடையாது. எனவே கால நிர்ணயத்தை நியமிக்க வேண்டும் என்று நாம் கேட்க முடியாது. அரசியல் சட்டத்தில் அதுக்கான திருத்தங்கள் கொண்டு வந்தால் நிச்சயமாக அந்த குறிப்பிட்ட காலத்துக்குள்  கேட்கலாம். இப்போது இருக்கும் தடை சட்டம் மூலமாக  ஆன்லைன் ரம்மியை தடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் 34 உயிர்  போயிருக்கிறது. அதனால்தான் தமிழக அரசின் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்துகிறோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related Stories: