விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, நாளை (ஜனவரி 12) காலை 10:17 மணிக்கு PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த மிஷன் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறனை ஒரு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக EOS-N1 என்ற செயற்கைக்கோள் விளங்குகிறது, இதற்கு ‘அன்வேஷா’ (Anvesha) என்று குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த PSLV-C62 சுமந்து செல்லும் EOS-N1 செயற்கைக்கோள், வெறும் படங்களை எடுக்கும் சாதாரண கருவி அல்ல. இது ‘ஸ்பேஸ் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் விண்வெளி உளவுத் திறனை இந்தியாவிற்கு வழங்கப்போகிறது. இது சாதாரண கேமராக்களைப் போல வண்ணங்களை மட்டும் பார்க்காமல், ஒளியின் நூற்றுக்கணக்கான நிழல்களை (Shades) பகுப்பாய்வு செய்து பூமியின் நிலப்பரப்பு குறித்த துல்லியமான அறிக்கையைத் தயார் செய்யும். இதன் மூலம் மண்ணின் ஈரப்பதம், காடுகளின் அடர்த்தி மற்றும் நிலத்தடியில் மறைந்திருக்கும் உண்மைகளை அதன் தனித்துவமான டிஜிட்டல் கையெழுத்து (Digital Signature) மூலம் கண்டறிய முடியும்.

பாதுகாப்பு ரீதியாகப் பார்த்தால், இது எதிரி நாடுகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமையும். மலைகள், காடுகள் மற்றும் பாலைவனங்களில் மறைந்திருக்கும் பயங்கரவாத முகாம்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நகர்வுகளை இந்த செயற்கைக்கோளின் ‘ஹைப்பர்ஸ்பெக்ட்ரல்’ தொழில்நுட்பம் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

வெறும் காட்சியாகப் பார்க்காமல், அது என்ன பொருள் என்பதை அடையாளம் காணும் திறன் கொண்டது. இந்தத் தொழில்நுட்பம். அதேபோல் விவசாயிகளுக்கு இது ஒரு சிறந்த நண்பனாக இருக்கும்; பயிர்களின் ஆரோக்கியம், நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி அபாயம் போன்றவற்றை இது முன்கூட்டியே அறிவிக்கும். மேலும், புயல் மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணித்து பெரும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு இது வழிவகுக்கும்.

இந்த ராக்கெட் இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதல்ல, மாறாக ஒரு சர்வதேசப் பயணமாக அமையவுள்ளது. இதனுடன் ஸ்பெயின், பிரேசில், தாய்லாந்து, இங்கிலாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்களும், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கியூப்சாட்களும் (Cubesats) விண்ணில் ஏவப்படுகின்றன.

இதில் மொத்தம் 15 வெளிநாட்டு மற்றும் இந்தியச் சிறிய செயற்கைக்கோள்கள் அடங்கும். மேலும், வருங்காலத்தில் விண்வெளியில் இருந்து பொருட்களைப் பாதுகாப்பாகப் பூமிக்குக் கொண்டு வரும் தொழில்நுட்பத்தைச் சோதிக்க ஒரு ‘ரீ-என்ட்ரி கேப்சூல்’ ஒன்றும் இந்த ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

Related Stories: