டெல்லி: ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து கட்சியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை எடுத்துச் சென்றார்.
நிலக்கரி கடத்தல் ஊழல் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்திய நிலையில், கணினித் தரவுகள் மற்றும் தேர்தல் வியூகங்களைத் திருடவே ஒன்றிய அரசு இந்தச் சோதனையை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. சோதனை நடந்த இடத்தில் போலீசார் சென்று ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மே.வங்க ஐகோர்ட்டில் ED மனு தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை ஜன.14க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். ED வழக்கு தொடர்பாக மேல்முறையீடு வந்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
