2009 பியான் புயலில் மாயமானவர்கள் உட்பட 12 மீனவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்களா?.. குமரி மாவட்ட அரசிதழில் அறிவித்து 5 மாதம் ஆகியது

நாகர்கோவில்: பியான் புயலில் மாயமானவர்கள் உட்பட 12 மீனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பது தொடர்பாக குமரி மாவட்ட அரசிதழில் அறிவித்து 5 மாதங்கள் ஆகிய நிலையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரபிக்கடலில் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி நள்ளிரவு உருவான பியான் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா,  உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் தாக்கிய அன்று இரவு அரபிக்கடலில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஆழ்கடலில்  மூழ்கியுள்ளனர். இவர்கள் சென்ற விசைப்படகும் ஆழ்கடலில் மூழ்கியுள்ளது. அதிவேக படகுகள், ஹெலிகாப்டர்  போன்றவை மூலம் அப்போது தேடியும் இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமான இம்மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இந்நிலையில் 2009 பியான் புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு  அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அப்போது தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. காலம் கடந்தும் போதிய நிவாரணம் கிடைக்காமல் உள்ளது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் இந்த ஏழை மீனவ குடும்பத்தினர் மீது இரங்கி, இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி, ஓகி புயலில் இறந்த, மாயமான மீனவர்களின் உறவினருக்கு  வழங்கப்பட்டதுபோல,

ஒரு சிறப்பு அரசாணை பிறப்பித்து ரூ.20 லட்சம் ரூபாய் நிவாரணமும், கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவர்கள் மாயமாகி 7 வருடங்களுக்கு மேலானதால், இந்திய சாட்சிய சட்டம் 1872, பிரிவு - 108-ன் படி, இவர்களை இறந்ததாக அறிவித்து இம்மீனவர்களின் உறவினர்களுக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் 6.6.2022 தேதியிட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் மாவட்ட அரசிதழ் வெளியீட்டில், ஓகிப்புயலினால் காணாமல் போனவர்ளை கண்டறியும் பொருட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்-4, கால்நடை பராமரிப்பு,

பால்வளம் மற்றும் மீன்துறை, தேதி 12.1.2018-னை அடிப்படையாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரால் ஒரு குழு அமைத்து ஆணையிடப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட குழு முறையான விசாரணை மற்றும் ஆய்வுக்கு பின்னர் கீழ்கண்ட நபர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று உண்மையிலேயே காணாமல் போய்விட்டதால் அவர்கள் உயிருடன் இல்லை எனக் கருதி அவ்வாறு காணாமல் போய்விட்ட நபர்களின் விபரங்கள் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களில் எவருக்காவது காணாமல் போய்விட்ட நபர்கள் உயிருடன் இருப்பதாக தெரியவந்தால், அதனை சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கோ, வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியருக்கோ அல்லது கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியருக்கோ அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காணாமல் போய்விட்ட நபர்கள் குறித்த விபரங்கள் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியர் அல்லது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்காவிட்டால், மேற்படி காணாமல் போய்விட்ட நபர்கள்   இறந்தவர்களாகவும் அவர்களை  கண்டுபிடிக்க இயலாதெனவும் கருதப்படுபவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 12 பேரின் புகைப்படங்கள், முகவரி வெளியிடப்பட்டிருந்தது. அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (6.6.2022) 5 மாதங்கள் ஆகிவிட்டது. எனவே இது தொடர்பாக அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றனி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘வருவாய் ஈட்டும் நபர்களை இழந்து தவிக்கும் இந்த ஏழை மீனவ குடும்பங்களின் மீது கருணை கொண்டு, இவ்விசயத்தில் தலையிட்டு, எவ்வித உதவியும் இன்றி நடுத்தெருவிலே நிற்கும் இம்மீனவர்களின் உறவினர்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்க, ஒரு சிறப்பு அரசாணை பிறப்பித்து  ஓக்கி புயலில் இறந்த மற்றும் மாயமான மீனவர்களுக்கு வழங்கப்பட்டதுபோல  ரூ.20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்கி இந்த குடும்பங்களை காப்பாற்ற  வேண்டுமென வேண்டுகிறோம்.  தாங்களது உடனடி நடவடிக்கை இம்மக்கள் வாழ வழிவகை செய்யும் என நம்புகிறோம்’ என்றார்.

மாயமான 12 மீனவர்கள் விபரம்

பியான் புயலில் 11.11.2009ல் மாயமானவர்கள்

1.மரியராஜன், தூத்தூர். 2.தாசன், கோயில்விளாகம். 3.ரோமான்ஸ், தூத்தூர். 4.ஜாண் கிளீட்டஸ் பூத்துறை, 5.அனீஷ், தூத்தூர், 6 ஸ்டாலின் தூத்தூர், 7.ஜிம்மி குட்டன், குழித்துறை.

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று 10.6.2010ல் மாயமானவர்கள்

1.ததேயூஸ், சின்னத்துறை. 2.பினு, இரவிபுத்தன்துறை. 3.சாஜி, சின்னத்துறை. 4.கிளீட்டஸ், புத்தன்துறை. 5. ஐசக், இரவிபுத்தன்துறை.

Related Stories: