பர்வதமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி: ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

கலசபாக்கம்: பர்வதமலை மகாதீப திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது என ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீத 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை அம்பாள் உடனுறை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகாதீப திருவிழாவன்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக  மகாதீப திருவிழாவில் பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு மகாதீப திருவிழாவில் வரும் 6ம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவுக்கு வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் க.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர் ஜோதிலட்சுமி வரவேற்றார்.

கூட்டத்தில், தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்காக மலையடிவாரத்தில் கூடுதலாக குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்து தருதல், கூடுதல் போக்குவரத்துகளை இயக்குதல், மலையேறும் பகுதிகளில் சன்னதி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குதல், மருத்துவ வசதிகள் செய்து தருதல், அன்னதானம் வழங்குபவர்கள் அனுமதி பெற்றால் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளித்தல், மலை மீதுள்ள சன்னதியில் தீபம் ஏற்றும் நிகழ்வின்போது தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், தாசில்தார் தட்சிணாமூர்த்தி, பிடிஓ கோவிந்தராஜூலு, சமூக பாதுகாப்பு தாசில்தார் மலர்கொடி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் கலையரசி துரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் எழில்மாறன், வித்யா, பிரசன்னா, பத்மாவதி, பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயல்அலுவலர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

Related Stories: