நுங்கம்பாக்கம் வணிக வளாகத்தில் பெண்கள் பாத்ரூமில் ரகசியமாக துளைபோட்ட ஊழியருக்கு அடி, உதை; விருப்பமான பெண்களை ரசிக்க நூதனம்

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்கள் பாத்ரூமில் ரகசியமாக துளை போட்டு பார்த்த தனியார் நிறுவன ஊழியரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். மேலும், பெண்கள் யாரையாவது வீடியோ எடுத்து மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனித்தனியாக பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் பாத்ரூமிற்கு சென்றுள்ளார். அப்போது, பாத்ரூமில் உள்ள சுவரில் யாருக்கும் தெரியாத வகையில் ஓட்டை ஒன்று இருந்துள்ளது. அந்த ஓட்டை வழியாக யாரே பார்ப்பதை அந்த பெண் ஊழியர் கவனித்தார். பிறகு ஓட்டை வழியாக பார்த்த போது வாலிபர் ஒருவர் பார்ப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு வணிக வளாகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பாத்ரூம் அருகே ஓடி வந்தனர். இதை கவனித்த அந்த வாலிபர் ஆண்கள் பாத்ரூமில் இருந்து தப்பி ஓடினார். ஆனால், விடாமல் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், திருவொற்றியூர் சாத்துமா நகர், வரதராஜன் தெருவை சேர்ந்த அசோக்குமார் (29) என்றும், சம்பவம் நடந்த வணிக வளாகத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அசோக்குமார் வேலை முடிந்து யாருக்கும் தெரியாமல் ஆண்கள் பாத்ரூமில் இருந்து பெண்கள் பாத்ரூமிற்கு இடையே உள்ள சுவரில் ரகசியமாக துளை போட்டுள்ளார்.

அந்த துளையை யாருக்கும் அடையாளம் தெரியாதபடி சோப்பு கட்டியைக் கொண்டு மூடி வைத்துள்ளார். வணிக வளாகத்தில் பணியாற்றும் பெண்களில் இவருக்கு பிடித்த பெண்கள் பாத்ரூம் செல்லும் போது, அசோக் குமாரும் பாத்ரூம் சென்று, துளையை மூடியுள்ள சோப்பை எடுத்து அதன் வழியாக பார்த்து ரசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனை போலீசார் கைப்பற்றி, பெண்கள் யாரையாவது வீடியோ எடுத்து மிரட்டி பணம் ஏதேனும் பறித்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: