சபரிமலையில் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்; பம்பையில் 24 மணி நேரம் இருமுடி கட்டும் வசதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (நவம்பர் 30) வரை 9.25 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். நேற்று வரை 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் (28ம் தேதி) 84 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இன்று (30ம் தேதி) வரை தரிசனத்திற்கு 9.25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில்  நேற்று வரை 6.50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதிகாலை நேரங்களிலும், மாலைக்குப் பின்னரும் தான் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்,  பம்பை கணபதி கோயில் அருகே உள்ள மண்டபத்தில் 24 மணி நேரமும் இருமுடி கட்டலாம். இதற்காக தேவசம் போர்டு அலுவலகத்தில் ரூ.300 பணம் கட்டி டிக்கெட் எடுத்தால் இருமுடி, நெய் தேங்காய், 18ம் படியில் உடைக்க வேண்டிய தேங்காய் உள்பட இருமுடி கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். கூடுதல் நெய் தேங்காய் வேண்டுமென்றால் அதிகமாக ரூ.80 கொடுக்க வேண்டும். பம்பை கணபதி கோயில் நடை சாத்தப்பட்டிருந்தாலும் இங்கு இருமுடி கட்ட வசதி உண்டு.

உடைகளை வீச வேண்டாம் சபரிமலை கோயில் தந்தி கண்டரரு ராஜீவரரு கூறுகையில்,‘ பம்பை நதியை புனிதமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஐயப்ப பக்தனின் கடமையாகும். எனவே இந்த புனித நதியில் அசுத்தமான பொருட்களை வீசக் கூடாது. பக்தர்கள் தாங்கள் உடுத்தி வரும் வேஷ்டி மற்றும் ஆடைகளை பம்பை ஆற்றில்  வீசுவதை தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: