துபாய், சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தியதாக 2 பேர் கைது

சென்னை: துபாய் மற்றும் சிங்கப்பூர் விமானங்களில் ரூ.38 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியின் உள்ளாடைக்குள் ஒரு தங்கச் செயின், 5 பார்சல்களில் தங்க பசை ஆகியவை இருந்தது. அதன் எடை 541 கிராம். சர்வதேச மதிப்பு ரூ.25.5 லட்சம். சுங்க அதிகாரிகள் அந்த சென்னை பயணியை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் ஒரு ஆண் பயணி துணிகளுக்கிடையே மறைத்து வைத்திருந்த, அமெரிக்க டாலர் கரன்சிகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். 2 பேரும் கைது செய்யப்பட்டு ரூ.38 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: