கடலூர் அருகே தடையை மீறி நள்ளிரவில் கொடியேற்றிய விடுதலை சிறுத்தைகள்: போலீஸ் குவிப்பு

வடலூர்: கடலூர் அருகே தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் விசிகவினர் கொடியேற்றியதால் பதற்றம் நிலவுகிறது. கடலூர் அடுத்த சுப்பிரமணியபுரம் கிராமத்தில்  விசிகவினர் 60 அடி உயர கொடி கம்பம் நட்டுள்ளனர். இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, கொடி ஏற்றுவதற்கு திட்டமிட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு பாமகவினர் கடலூர்- விருத்தாச்சலம்  சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். விசிக கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி பாமகவினர் போராட்டத்தை தொடர்ந்தனர். கொடிக்கம்பத்தை அகற்ற முடியாது எனக்கூறி விசிகவினரும் மறியலில் ஈடுபட்டனர்.  

விசிக மற்றும் பாமக இரு கட்சியினரும் ஒரே இடத்தில் மறியலில் செய்ததால், இரு கட்சியினருக்கும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. அசம்பாவிதத்தை தடுக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, எஸ்பி சக்திகணேசன் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சு நடத்தினர். நள்ளிரவு 12  மணிவரை எந்த முடிவும் எட்டப்படாததால் 2 நாட்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்ததால் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே தடையை மீறி நேற்று முன்தினம் 12.40 மணியளவில் வி.சி கட்சியினர் கொடியேற்றி விட்டனர். இதனால் நேற்று காலை மீண்டும் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயன்ற அதிமுகவினர்

விழுப்புரம்: சென்னை தேசியநெடுஞ்சாலையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அரசு மருத்துவமனை அருகே நேற்று காலை  அனுமதியின்றி அதிமுகவினர் கொடிக்கம்பம் நட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி அவர்கள் கொடிக்கம்பம் நடுவதற்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டதால் போலீசார், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் அனுமதி கோரி அதிமுகவினர் மனு கொடுத்தனர். அவர் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பிறகே அனுமதி வழங்கப்படும் எனக்கூறி அனுப்பி வைத்தார். இதுபோன்று  பாமக மற்றும் தேமுதிக சார்பிலும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நட அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். இப்பிரச்னையால் நான்குமுனை சந்திப்பில் அரைமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: