அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தான் முழுவதும் தாக்குதலை நடத்துங்கள்: தீவிரவாத அமைப்பின் திடீர் அழைப்பால் பதற்றம்..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை திடீரென ரத்துசெய்த தீவிரவாத அமைப்பினர், அந்நாட்டுக்கு எதிராக தாக்குதலை நடத்த அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நிலவியுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், எதிர்கட்சிகளின் சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பொது கூட்டம் ஒன்றில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாகிச் சூடு நடத்தப்பட்டது. அடுத்தடுத்த சம்பவங்களால் பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.

இதற்கிடையே கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா விரைவில் ஓய்வு பெற உள்ளதால், அடுத்த ராணுவ தளபதி குறித்த விவாதங்களும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் (டிடிபி) என்ற  தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை ஆப்கானில் தலிபான்கள்  இருப்பது போல், இவர்களை பாகிஸ்தானின் தலிபான்கள் என்று கூறுவர். இவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குல்களை நடத்தி வருவர்.

அதனால் இந்த அமைப்பினருக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் கூட்டுக் குழுவாக உருவாக்கப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பானது, கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மற்றும் லக்கி மார்வாட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் அரசுக்கும் டிடிபி  அமைக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, திடீரென அந்த அமைப்பு ரத்து செய்துள்ளது. மேலும் இதுகுறிந்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,  ‘முஜாஹிதீன்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது.

ராணுவமும் உளவுத்துறையும் நம் மீதான தாக்குதல்களை  நிறுத்தவில்லை. அதனால் பாகிஸ்தான் அரசுடன் போடப்பட்ட போர் நிறுத்த  ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம். எனவே பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நாடு  முழுவதும் நீங்கள் (தீவிரவாதிகள்) பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் 2012ம் ஆண்டில், பெண்ணிய சமூக ஆர்வலரான மலாலா யூசுப்சாய் (அப்போது அவர் சிறுமி) என்பவரை துப்பாக்கியால் சுட்டனர்.

பெஷாவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மலாலாவுக்கு, சமீபத்தில் நோபல் பரிசும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: