திருக்குறுங்குடி அருகே கடமான் கறி சமைத்த மூவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை

களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் இருவர் கடமான் கறியை சமைத்து கொண்டிருப்பதாக திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தலைமையில், வனவர் ஜெபிந்தர்சிங் ஜாக்சன், வனக்காப்பாளர் ராம்குமார்,  வேட்டை தடுப்புக் காவலர்கள் அன்னத்துரை, பாலமுருகன், முத்துக்குமார், முத்துகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது 2 பேர் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்ததை கண்டனர். வனத்துறையினரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓட முயற்சி செய்தனர். வனத்துறையினர் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருக்குறுங்குடியை சேர்ந்த ரமேஷ் (28), அவரது தம்பி பெர்வின் (25) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த வெள்ளப்பாண்டி (54) என்பவர் தான் கடமான் கறியை கொடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து வெள்ளப்பாண்டியையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன் மலையடிவாரத்தில் செந்நாய்கள் கடித்ததில் உயிரிழந்த கடமானின் கறியை அரிவாளால் வெட்டி வீட்டிற்கு எடுத்து வந்து, உப்பு கண்டம் போட்டு வைத்திருந்ததும், அந்த கறியை தான் அவர் ரமேஷிடம் கொடுத்து இருப்பது தெரிய  வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து உப்பு கண்டம் போடப்பட்ட கடமானின் கறி துண்டுகள் மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மூவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: