திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் வீடு புகுந்து 2 குழந்தைகளின் தாய்க்கு சரமாரி அடி, உதை: தடுத்த தோழியை வெட்டிய வாலிபர் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (30), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு திருமணம் நடந்து 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து சென்று சுமார் 8 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (28). இவருக்கும், சாந்திக்கும் சுமார் இரண்டு வருடமாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் கன்னியப்பன் தொடர்ந்து சாந்தியை திருமணம் செய்துகொள்ளுமாறு சித்ரவதை செய்து சரமாரியாக அடித்து வந்ததாக தெரிகிறது. இதனால், பயந்துபோன சாந்தி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், கன்னியப்பன் என்பவர் தினமும் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வீட்டிற்கு வந்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்கிறார். இனிமேல் என்னை தொந்தரவு செய்யக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் கன்னியப்பன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சாந்தி பலமுறை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, தனது புகார் மீது என்ன ஆச்சு என்று கேட்டபோது சாந்தியை போலீசாரும் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சாந்தியிடம் கன்னியப்பன் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி மீண்டும் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு, சாந்தி திருமணம் செய்ய என்னால் முடியாது என கூறியபோது ஆத்திரமடைந்த கன்னியப்பன் சாந்தியை சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தியின் தோழி ஓடி வந்து தடுத்தபோது சாந்தியின் தோழியை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியுள்ளார்.

அப்போது, பாதிக்கப்பட்ட இரு பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வருவதை கண்டு பயந்துபோன கன்னியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சாந்தி மற்றும் அவரது தோழி இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து அரசு மருத்துவமனையில் இருந்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சாந்தியிடம் விசாரணை செய்தனர். பின்னர் போலீசார் சாந்தியிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து நேற்று  கன்னியப்பனை கைது செய்தனர். அவர்மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: