குஜராத் தேர்தல் பணியில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை: வாக்குவாதம் ஏற்பட்டதால் சக வீரர் வெறிச்செயல்

போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினருக்கு  இடையே ஏற்பட்ட மோதலில் 2 வீரர்கள் சக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் சட்டப் பேரவை முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் டிச. 1ம் தேதி 89 ெதாகுதிகளில் நடைபெறுகிறது. அதனால் வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்கான வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைககள் தொடங்கியுள்ளன. போர்பந்தரில் தேர்தல் பணிக்காக ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர்.

அவர்களில் துணை ராணுவ படையின் வீரர்களில் ஒருவருக்கு ஒருவர் நேற்று மாலை திடீரென மோதிக்கொண்டனர். ஆவேசமடைந்த ராணுவ வீரர் ஒருவர், தனது கையில் வைத்திருந்த ஏகே 56 ரக துப்பாக்கியால்  சக ராணுவ வீரர்களை நோக்கி  சுட்டார். அதனால் சம்பவ இடத்திலேயே 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த ராணுவ உயரதிகாரிகள், இறந்த ராணுவ வீரர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த வீரர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரில் ஒருவருக்கு வயிற்றிலும், மற்றொருவருக்கு காலிலும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போர்பந்தர் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.சர்மா கூறுகையில், ‘வீரர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரு ராணுவ வீரர் தனது சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சம்பவம் நடந்த போது ராணுவ வீரர்கள் பணியில் இல்லை. அவர்கள் ஓய்வில் இருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: