100 அடி அகலமுள்ள மண்டி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கக்கூடாது வேலூர் பழைய பஸ் நிலையத்தில் லிப்ட் பார்க்கிங் அமைக்கப்படும்

*பழைய மீன் மார்க்கெட்டுக்கு நடைபாதை கடைகளை மாற்ற வேண்டும்

*டிசம்பர் 10ம் தேதிக்குள் மாற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

வேலூர் : வேலூர் பழைய பஸ்நிலையத்தில் லிப்ட் பார்க்கிங் அமைக்கப்படும், 100 அடி அகலமுள்ள மண்டி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி, வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் பழைய மீன்மார்க்கெட் இடத்திற்கு கடைகளை மாற்ற வேண்டும் என்று ஆய்வு செய்த, கலெக்டர், எம்எல்ஏ வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். வேலூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டி தெரு 100 அடி அகலம் கொண்டது. இந்த சாலை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பின்னர், பஸ்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண்டி தெருவில் வடக்கு புறத்தில் இருந்து தெற்கு பகுதி வரையில் இருபுறங்களிலும் நடைபாதைகளில் கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை வியாபாரிகளுக்கு, பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் கடைகள் கட்டப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு கடைகள் வைக்காமல் தொடர்ந்து மண்டிவீதியில் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்எல்ஏ கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் மண்டி வீதியில் ஆய்வு செய்தனர். அப்போது 100 அடி அகலத்துடன் பஸ் போக்குவரத்தில் இருந்த சாலை, நடந்து செல்லவும் வழியின்றி வாகனங்கள், நடைபாதை கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மேலும் காவல் சேவை மையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. நடைபாதைகளில் உள்ள கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும் தள்ளுவண்டி, நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ளவர்கள், பழைய மீன்மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, பழைய மீன்மார்க்கெட் கடைகளுக்கு குறைந்த வாடகை நிர்ணயிக்க கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் வரும் டிசம்பர் 10ம் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படும். அதற்குள் மண்டிவீதி போக்குவரத்து பிரச்னை முடிக்கு வந்திருக்க வேண்டும் என்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர், எம்எல்ஏ கார்த்திகேயன் கூறுகையில், ‘வியாபாரிகள் மண்டிவீதியில் உள்ள சென்டர் மீடியன் அகற்ற கோரியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை முடிவு செய்வார்கள். நடைபாதை வியாபாரிகள் பழைய மீன்மார்க்கெட்டில் அவர்களுக்காக கட்டிய கடைகளுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடகையும் குறைந்த விலையில் நிர்ணயிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 இடங்களில் கழிவறை வசதி ஏற்படுத்த வியாபாரிகள் கோரியுள்ளனர்.

தொல்லியல் துறை ஆட்சேபிக்கும் இடத்தினை தவிர்த்து பழைய பஸ்நிலையத்தில் ஒரு இடத்தில் லிப்டிக் கார் பார்க்கிங் அமைக்கப்படும். நேஷ்னல் தியேட்டர் அருகே கழிவுநீர் அடைப்பு உள்ளதால், அதனை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் மண்டிவீதி நடைபாதை கடைகள் வரும் 10ம் தேதிக்குள், பழைய மீன்மார்க்கெட் கடைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர். ஆய்வின்போது, டிஎஸ்பி திருநாவுக்கரசு, உதவி கமிஷனர்கள் பிரபுகுமார் ஜோசப், செந்தில்குமார், சுகாதார அலுவலர் முருகன், லூர்துசாமி உட்பட பலர் இருந்தனர்.  

மணிக்கூண்டு பழமை மாறாமல் சீரமைப்பு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணிக்கூண்டு, முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் விவரங்களுடன் 1920ம் ஆண்டு கிங்ஜார்ஜ் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்துள்ள மணிக்கூண்டு, பழமை மாறாமல் சீரமைக்க, மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எம்எல்ஏ கார்த்திகேயன், கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தனர்.  

நவதானிய மண்டிக்கு அப்ரூவல்

நவதானிய மண்டி மேல்மொணவூரில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அப்ரூவல் மாவட்ட அளவில் வழங்கப்பட்டு, உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கு அனுமதி கிடைத்தவுடன், அதற்கான பணிகள் முடிந்தபிறகு மொத்த வியாபாரம் முழுவதுமாக மேல்மொணவூருக்கு மாற்றப்படும். சில்லறை வியாபாரம் தொடர்ந்து இங்கேயே இயங்கி வரும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: