கும்பகோணம் மடத்தில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள 4 உலோக சாமி சிலைகள் பறிமுதல்-சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

திருவிடைமருதூர் : கும்பகோணம் மவுன சாமி மடத்தில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம்  மதிப்புள்ள 4 உலோக சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கம்பட்ட விசுவநாதர் கோயில் வடக்கு வீதியில் மவுன சாமிகள் மடம் உள்ளது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த மடத்தில் இருந்த சிலைகள், ஆபரணங்கள் மாயமானதாக இந்து அமைப்புகள் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் புகார் அளித்தது.

இதையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை டிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவுப்படி‌ ஐ.ஜி தினகரன் வழிகாட்டுதலின்படி கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்.இன்ஸ்பெக்டர் பாலசந்தர், எஸ்எஸ்ஐ ராஜகோபால், ஏட்டு கோபால் மற்றும் போலீசார் நீதிமன்றத்தின் முன் அனுமதியுடன் கும்பகோணம் மௌன சுவாமிகள் மடத்தில் நேற்றுமுன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் உலோக சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொன்மையான 4 அடி உயர நடராஜர் உலோக சிலை, அரை அடி உயர திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய சிவகாமி அம்மன் உலோக சிலை, அரை அடி உயர திருவாச்சி மற்றும் பீடத்துடன் கூடிய விநாயகர் உலோக சிலை, ஒன்னேகால் அடி உயரம் பாலதண்டாயுதபாணி உலோக சிலை மற்றும் 63 நாயன்மார்களின் லீலைகள் அடங்கிய தஞ்சாவூர் ஓவியங்கள் கைப்பற்றப்பட்டது.

இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.இதில் கைப்பற்றப்பட்ட உலோக சிலைகள் மற்றும் ஓவியத்தை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

சிலைகளானது தமிழகத்தின் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சொந்தமானதா என்கிற விபரம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: