காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டது எலிகள்: உபி. போலீஸ் அறிக்கை; நீதிபதி அதிர்ச்சி

மதுரா: உத்தரப்பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் அளித்த அறிக்கையால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில்  போதைப்பொருள் கடத்தல் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஷெர்கர் காவல்நிலைய கிடங்கில் 386 கிலோ கஞ்சாவும்,  நெடுஞ்சாலை காவல்நிலைய கிடங்கில் 195 கிலோ கஞ்சாவும் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில்  சமர்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சஞ்சய் சவுத்ரி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சமர்பிக்க உத்தரவிட்டார். இதற்கு மதுரா காவல்துறை சார்பில் சமர்பித்த பதில் அறிக்கையில், ‘காவல்நிலைய கிடங்குகளில் வைக்கப்பட்டு இருந்த 500 கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சாவை எலிகள் தின்று சேதப்படுத்திவிட்டன’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கேட்ட நீதிபதி, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நீதிபதி, மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் எலிகள் அச்சுறுத்தலில் இருந்து முதலில் விடுபடவும், பின்னர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதற்கான ஆதாரத்தை 26ம் தேதி (நாளை) சமர்பிக்கும்படியும் உத்தரவிட்டார்.

Related Stories: