பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.89 லட்சம் ஹவாலா பணம் ஒப்படைப்பு

அம்பத்தூர்: பெரம்பூர் ரயில்நிலையத்தில் பிடிபட்ட ரூ.89 லட்சம் ஹவாலா பணத்தை நேற்று வருமான வரி துறை அதிகாரிகளிடம் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர். சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று அம்பத்தூர் மதுவிலக்கு மற்றும் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு தலைமையில் தனிப்படை போலீசார் அம்பத்தூர் ரயில்நிலையத்துக்கு விரைந்தனர். அங்கு சந்தேக நிலையில் பையுடன் சுற்றி திரிந்த நபரை போலீசார் பின்தொடர்ந்தனர். இதனால் அந்நபர் ரயிலில் ஏறி பெரம்பூர் ரயில்நிலையத்தில் இறங்கியுள்ளார்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் அந்த மர்ம நபரை அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது பையை சோதனை செய்ததில், கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டு இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்நபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். பையில் இருந்த பணத்தை எண்ணியதில் ரூ.89 லட்சம் ஹவாலா பணம் எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர் புரசைவாக்கத்தை சேர்ந்த அபிஷேக் (40) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை வருமானவரி துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட அபிஷேக் மற்றும் பறிமுதல் செய்த ரூ.89 லட்சம் ஹவாலா பணத்தை அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். பிடிபட்ட அபிஷேக்கிடம் இந்த பணம் யாருடையது, யாரிடம் கொடுக்க இவர் சென்றார் என வருமானவரி துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: