ஒருமுறை கூட ஆபரணங்கள் அம்மனுக்கு சாத்தப்படவில்லை பக்தர்களிடம் சித்தூர் அர்ச்சகர் பல லட்சம் ரூபாய் மோசடி-பெண் பரபரப்பு புகார்

சித்தூர் : வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்களிடம் சித்தூர் அர்ச்சகர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சித்தூர் கட்டமஞ்சு பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2009ம் ஆண்டில் இருந்து காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலின் துணை கோயிலான லட்சுமி தேவி கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் என்னால் முடிந்த நன்கொடைகளை அர்ச்சகர் சோமுசேகரிடம் வழங்குகிறேன். இதுவரை எனக்கு நன்கொடைக்கான ரசீது வழங்கவில்லை. அந்த கோயிலை கட்ட பல லட்சம் ரூபாய் நிதி வழங்கினேன்.

காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு வேலூர் சக்தி அம்மா ₹18 லட்சத்தில் மூலவருக்கு 3 நாமபட்டையை வழங்கினார். அதை கோயில் அர்ச்சகர் பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. நான் ஒவ்வொரு முறையும் நன்கொடை வழங்கியதற்கான ஆதாரம், புகைப்படம் தன்னிடம் உள்ளது. 2019ம் ஆண்டு லட்சுமிதேவிக்கு ₹50 ஆயிரத்திலான வெள்ளி ஆரம், செயின், கம்மல் உள்ளிட்டவை வழங்கினேன். பலமுறை தரிசனத்திற்கு சென்ற போது ஒருமுறை கூட ஆபரணங்கள் அம்மனுக்கு சாத்தப்படவில்லை. சிலை வழங்க ₹35 ஆயிரம் வழங்கினேன். மேலும், அந்த லட்சுமி தேவி சிலை மிகவும் சிறியதாக இருக்கிறது புதிதாக ஒரு லட்சுமி தேவி சிலை வாங்கி தருமாறு தெரிவித்தார். இதனால், நான் ₹50 ஆயிரம் வழங்கினேன்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். தற்போது 35 கிலோ எடை கொண்ட பஞ்சலோக லட்சுமி தேவி சிலையை வருகிற 8ம் தேதி செயல் அலுவலர் வெங்கடேஷிடம் வழங்க உள்ளேன். நன்கொடை வழங்கியதற்கான ரசீதுகளை அர்ச்சகர் சோமுசேகர் வழங்க வேண்டும். இல்லையென்றால், அவர் மீது வழக்கு தொடர்வேன். ஏராளமான பக்தர்கள் விநாயகர், லட்சுமிதேவி மற்றும் ஈஸ்வரனுக்கும் நன்கொடை வழங்கி இருப்பார்கள்.

இவை அனைத்தையும் கோயில் பிரதான அட்சகர்கள் ஊழலில் ஈடுபட்டு உள்ளார்கள்.  

அர்ச்சகர் சோமுசேகர் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நான் கலெக்டர், எஸ்பி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 20 இடங்களில் புகார் அளித்துள்ளேன். எனவே, அவர் மீது அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போல் வேறு எந்த பக்தர்களும் ஏமாறக்கூடாது. இவ்வாறு, கூறினார்.

Related Stories: