கடலூர் மக்களிடம் நிலம் கேட்க முயற்சித்தால் என்எல்சியை வெளியேற்ற போராட்டம் நடத்துவோம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுக்கும்படி பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தினால், கடலூர் மாவட்ட மக்களை காக்க போராட்டத்தை முன்னெடுப்போம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை, அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ, மாத வாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு, சுரண்டப்பட்ட மக்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டிருப்பதும், என்.எல்.சிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களை ஆசை காட்டி ஏமாற்ற மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் தலைமையில் களமிறங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை.

இப்போதும் கூட நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 23,000-க்கும் கூடுதலான குடும்பங்களில் வெறும் 1000 பேருக்கு மட்டுமே வேலை வழங்க என்.எல்.சி முன்வந்திருக்கிறது. அவ்வாறு தரப்படும் வேலை அடுத்த 99 நாட்களில் கூட பறிக்கப்படக் கூடும். 50 ஆண்டுகளாக தங்களை சுரண்டிய என்.எல்.சி. இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதை போல நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவர்கள் என்.எல்.சி மீது நம்பிக்கையிழந்து விட்டனர். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால், கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பாமக முன்னெடுக்கும்.

Related Stories: