மின் கட்டண தொகையை செலுத்தாததால் டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலரை அள்ளிச் சென்ற மின்வாரியம்; மத்திய பிரதேச மின் நுகர்வோர் அதிர்ச்சி

உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில் மின் கட்டண தொகையை முறையாக செலுத்தாததால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரின் வீடுகளில் இருந்த டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலர் போன்றவற்றை தனியார் மின்வாரிய ஊழியர்கள் அள்ளிச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனம் தான் மக்களுக்கு மின்விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் மின்கட்டணத்தை முறையாக செலுத்தாத நுகர்வோரிடம் வித்தியாசமான முறையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி உஜ்ஜயினியை சேர்ந்த மின் நுகர்வோர் ஒருவர் பல மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். அவருக்கு எதிராக தனியார் நிறுவனம் பலமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இருந்தும் அந்த நுகர்வோர் மின்கட்டணத்தை செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு அவரது வீட்டில் இருந்த  ஃப்ரிட்ஜ், டிவி, ஏர் கூலர், ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களை மின்வாரிய ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதேபோல் அதேபகுதியில் மின் கட்டணத்தை முறையாக செலுத்தாத நுகர்வோரின் வீடுகளில் இருந்து அவர்கள் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களை அள்ளிச் சென்றனர். இதுகுறித்து தனியார் மின்வாரிய நிறுவன அதிகாரிகள் ராஜேஷ் ஹரோட் கூறுகையில், ‘இங்குள்ள மக்கள் கடந்த ஓராண்டாக மின்கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை.

அவர்களுக்கு பல முறை நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பியும் கட்டணம் செலுத்தவில்லை. ஒவ்ெவாருவரும் சுமார் 40 முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை பில் பாக்கி வைத்துள்ளனர். அதனால் மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோரின் வீட்டில் இருந்து அவர்கள் பயன்படுத்தும் மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. உஜ்ஜயினி நகரில் உள்ள சுமார் 200 நுகர்வோர்கள் எங்களது மின்வாரியத்துக்கு ரூ.1.70 கோடி பாக்கி வைத்துள்ளனர்’ என்று கூறினார்.

Related Stories: