அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: அதிமுக மாஜி நிர்வாகி கைது

வேலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  ந்தவர்களிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். வேலூர் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(48). இவர் வேலூர் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளராக இருந்தார். கடந்த 2018ல் அதிமுக ஆட்சிக்காலத்தில், அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பலரிடம் ரேஷன் கடையில் வேலை, டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராமல் சுகுமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கிடையில் சுகுமார் திடீரென தலைமறைவாகி விட்டார்.

இதனால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, வேலூர் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் சுகுமார் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவர் வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் அளித்த மனுவில், ‘சுகுமார் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.25 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சுகுமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், ‘அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம்  ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் என சுமார் ரூ.57 லட்சம் வரை அவர் மோசடி செய்துள்ளது’ என்றனர்.

Related Stories: