‘இது தமிழகம் அல்ல’ என்று கத்தியவாறு கேரள தலைமை நீதிபதியை தாக்க வந்த டிரைவர் கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சேராநல்லூர் என்ற பகுதியில் பைக்கில் வந்த நபர் ஒருவர், தலைமை நீதிபதியின் காரை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் ஆவேசத்துடன் அந்த வாலிபர் தலைமை நீதிபதியை பார்த்து, ‘‘இது தமிழ்நாடு அல்ல’’ என்று ஆவேசமாக கூக்குரலிட்டார். காரில் இருந்த நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரியை அந்த நபர் தாக்க முயன்றார். உடனே தலைமை நீதிபதியின் வாகனத்தின் பின்னால் வந்த போலீசார் அந்த நபரைப் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவரது பெயர் டிஜோ என்றும், இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையை சேர்ந்தவர், கொச்சியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அவர் குடிபோதையில் இருந்தார்.

இது குறித்து தலைமை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் கொச்சி முளவுகாடு போலீசார் லாரி டிரைவர் டிஜோ மீது இபிகோ 308 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கேரள தலைமை நீதிபதியை வாலிபர் தாக்க முயன்ற சம்பவம் கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபர் எதற்காக நீதிபதியை தாக்க முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: