வளர்ச்சி அடிப்படையில் பிரசாரம் எதிர்கட்சிகளை மாற்றி விட்டது பாஜ: குஜராத்தில் மோடி பெருமிதம்

டோராஜி: குஜராத்தின் நலனுக்கு எதிரானவருடன் காங்கிரஸ் கை கோர்த்து உள்ளது என்று  தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். குஜராத் சட்டமன்றத்துக்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.  பிரதமர் மோடி கடந்த 6ம் தேதி குஜராத்தில் முதல் கட்ட பிரசாரம் செய்தார். அதன் பிறகு, 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு மீண்டும் குஜராத்துக்கு வந்தார். இந்நிலையில், டோராஜியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘ கட்ச் மற்றும் கத்தியாவாட் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை போக்குவதற்கு நர்மதா அணைதான் ஒரே தீர்வு.

நீங்கள் எல்லாம் நேற்று முன்தினம் ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) நர்மதா அணை திட்டத்தை எதிர்த்த ஒரு பெண்ணுடன்(சமூக ஆர்வலர் மேதா பட்கர்) நடைபயணம் சென்றதை பார்த்திருப்பீர்கள். இந்த அணையை கட்டக்கூடாது  என்பதற்காக பல்வேறு சட்ட சிக்கல்களை உருவாக்கியதால் 30 ஆண்டுகள் வரை திட்டம் காலதாமதம் ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு குடிநீர் சென்று விடக்கூடாது என்பதற்காகவே  அவரும் அவருடைய ஆதரவாளர்களும் போராட்டங்களை நடத்தினர்.

குஜராத்தின் பெயரையே இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்பட்ட போராட்டத்தினால் உலக வங்கி இந்த திட்டத்துக்கு நிதி உதவியை நிறுத்தி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரும் போது,இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்கிறீர்கள் என்று நீங்கள்  கேட்க வேண்டும்’’ என்றார். துறைமுக நகரான வெராவல்லில்  அவர் பேசும்போது, ‘‘வாக்கு பதிவு நாளில் ஏராளமான மக்கள் வாக்கை செலுத்த வேண்டும்.முந்தைய வாக்குபதிவு எண்ணிக்கை சாதனையை முறியடிக்க வேண்டும்.

அனைத்து வாக்குசாவடிகளிலும் பாஜவின் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார். போதாத் தொகுதியில் மோடி பேசுகையில், ‘ஆரம்பத்தில் தாத்தா (நேரு), அப்பா (ராஜிவ் காந்தி)மற்றும் மற்றவர்கள் பெயரில் ஓட்டு கேட்கப்பட்டது. பிறகு, ஜாதி, மதத்தின் பெயரில் வாக்கு கேட்கப்பட்டது. பாஜ தற்போது, வளர்ச்சி தி்டடங்களை கூறி ஓட்டு கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு மற்ற கட்சிகளை தள்ளியுள்ளது,’ என தெரிவித்தார்.

Related Stories: