என்ஐஏ கோரிக்கை நிராகரிப்பு நவ்லகாவை 24 மணி நேரத்தில் வீட்டு காவலில் வைக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நவ்லகாவை 24 மணி நேரத்தில் கண்டிப்பாக வீட்டு காவலுக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டது. எல்கர் பரிஷத் மற்றும் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கவுதம் நவ்லகா, நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 70 வயதான அவர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுவதால், வீட்டு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவ்லகாவை வீட்டு சிறையில் வைக்க கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜோசப், ஹிருஷிகேஷ் ராய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, ‘‘நவ்லகா பல உண்மைகளை நீதிமன்றத்தில் மறைத்துள்ளார். அவருக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள், மாவோயிஸ்ட்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே அவரை வீட்டுகாவலில் அனுப்பினால் கண்காணிப்பது சிரமமாகும்’’ என்றார். இதைக் கேட்டு நீதிபதிகள், ‘’70 வயதான உடல் நலம் குன்றியவரை கண்காணிப்பது கடினம் என்பது ஆச்சரியம் தருகிறது. நீங்கள் சிசிடிவி கேமரா வையுங்கள். ஜன்னல் கதவுகளை சீலிடுங்கள். சிறையை விட அதிக கெடுபிடிகளை வையுங்கள். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் தவறாமல் நவ்லகாவை வீட்டு காவலில் வைத்திடுங்கள்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: