182 ஏக்கர் நில மோசடி வழக்கு விசாரணையில் ‘திடுக்’ பல நூறு கோடி கனிம வளம் கொள்ளை: தேனி விஐபியிடம் விரைவில் விசாரணை

தேனி: தேனி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலம் முறைகேடாக தனியார் சிலருக்கு பட்டா மாறுதல் செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள அதிகாரிகள் உள்ளிட்டோரை கைது செய்யும் பணியை சிபிசிஐடி துரிதப்படுத்தி உள்ளது. விசாரணையில், பல நூறு கோடி கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலத்தை அதிமுக ஆட்சி காலத்தில் தனியார் பலருக்கு அப்போதைய அரசுத்துறை அதிகாரிகள் முறைகேடாக  பட்டா மாறுதல் செய்தனர். இப்பட்டா மாறுதல் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டராக இருந்த ரிஷப் கடந்த ஆண்டு விசாரித்து, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலிசில் புகாரளித்தார்.

 தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  நில மோசடி தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, பெரியகுளம் தாசில்தார்களாக இருந்த கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத்தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.  இவ்வழக்கில் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கான பட்டாக்களை  கலெக்டர் ரத்து செய்துள்ளார். கடந்த 16ம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய பெரியகுளம் தாசில்தாராக இருந்த கிருஷ்ணகுமாரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறயைில் அடைத்தனர். இவரை சிபிசிஐடி விசாரித்ததில் தேனி மாவட்ட முக்கிய விஜபிக்கும் தொடர்பிருப்பதாக ெதரிகிறது.

பட்டா மாறுதல் செய்யப்பட்ட நிலத்தில் இருந்து எவ்வளவு கனிம வளம் கொள்ளயைடிக்கப்பட்டுள்ளது என சாட்டிலைட் மூலமாக  சர்வே செய்யப்பட்டது. இதில் பலநூறு கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இக்கொள்ளை சம்பந்தமாக கனிமவளத்துறை உதவி இயக்குநர்களாக இருந்த சாம்பசிவம், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்களில் ஒருவரான பெரியகுளம் தாசில்தாராக இருந்த ரத்னமாலா தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இன்னமும் ஒரு வாரத்திற்குள் ரத்னமாலா கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி போலீசார் கூறுகின்றனர். தாசில்தார் கைது செய்யப்பட்ட பிறகு இவ்வழக்கில் தொடர்புடைய கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரதா ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுப்பதா எனவும் சிபிசிஐடி ஆலோசித்து வருகிறது. மேலும், அதிகாரிகள் கைது படலம் வருகிற வாரத்தில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசு நில மோசடிக்கு பின்புலமாக தேனி மாவட்ட விஐபி இருந்துள்ளதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் கைது முடிந்ததும், இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை முக்கிய விஐபி பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: