புழல்: செங்குன்றத்தில் நேற்றிரவு குடிபோதையில் மனைவியின் சகோதரரை கொன்றவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை கிண்டி, மடுவங்கரை முதல் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (37). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி செல்வி. கடந்த 6 மாதத்துக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, வேறொருவருடன் செல்வி சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து செங்குன்றம், வைத்தீஸ்வரன் தெருவில் வசிக்கும் செல்வியின் தம்பி நாகராஜ் (26) என்பவர் வீட்டில் செல்வகுமார் தங்கியிருந்து, வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு மாமன் செல்வகுமாரும் மச்சான் நாகராஜும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் நாகராஜிடம் குடிபோதையில், எனது மனைவியை பிரிந்து வாழ்வதற்கு நீதான் காரணம் என செல்வகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமான செல்வகுமார், நாகராஜை கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாள்மனையால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்று, தனது மச்சான் நாகராஜை யாரோ கொலை செய்துவிட்டனர் என செல்வகுமார் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, நாகராஜின் சடலத்தை, கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் இருந்த செல்வகுமாரிடம் தீவிரமாக விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை போதை தெளிந்ததும், நான்தான் நாகராஜை வெட்டி கொலை செய்தேன் என செல்வகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.