நிலத்தகராறில் பண்ணை வீட்டுக்கு தீ வைப்பு: சொந்த கட்சி தலைவரை கொல்ல கூலிப்படையை ஏவிய பாஜக நிர்வாகி: பீகார் போலீஸ் அதிரடி

ஜமால்பூர்: முன்விரோதம் காரணமாக சொந்த கட்சித் தலைவரை கொல்ல கூலிப்படையை பாஜக நிர்வாகி ஏவிய நிலையில், இந்த தகவலை அறிந்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் ஜமால்பூர் தொகுதியின் பாஜக மண்டலத் தலைவரும், ஓட்டல் அதிபருமான கிஸ்டோ சிங்கிற்கும், பாஜகவை சேர்ந்த ஓபிசி அமைப்பின் ஜமால்பூர் நகரத் தலைவர் வசிஷ்ட் ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு  இருந்தது. வசிஷ்ட்டின் பண்ணை வீட்டை கிஷ்டோ சிங்கும் அவரது ஆதரவாளர்களும் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து சஃபியாபாத் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். இவ்விவகாரத்தால் கிஸ்டோ சிங்கிற்கும், வசிஷ்ட்டுக்கும் மேலும் பகை அதிகமானது.

தனது சொந்த கட்சித் தலைவர் கிஷ்டோ சிங்கை கொல்ல வசிஷ்ட் திட்டமிட்டார். இதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்தார். அதற்காக கூலிப்படைக்கு ரூ.3 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்றால் போல் கிஸ்டோ சிங்கின் ஓட்டலை சுற்றிலும் மர்ம நபர்களின் நடமாட்டமும் இருந்தது. அதையறிந்த கிஸ்டோ சிங் ஓட்டலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். தனது கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் பேசி, போலீசுக்கும் தகவல் கொடுத்தார். அதையடுத்து போலீசார் மர்ம நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கிஸ்டோ சிங்கின் ஓட்டல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் கூறிய விஷயங்கள் முன்னுக்கு பின்னாக இருந்ததால், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில்,  கிஸ்டோ சிங்கை கொல்ல வந்ததாகவும், அதற்காக ரூ. 3 லட்சத்தை வசிஷ்ட் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  2 நாட்டுத் துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், 3 செல்போன்கள், ஒரு பைக் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். முன்பகையால் சொந்த கட்சியை சேர்ந்த தலைவரை கூலிப்படை ஏவிக் கொல்ல திட்டமிட்ட சம்பவம் மாநில பாஜக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: