சென்னை: சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்னையில் காய்கறி வியாபாரி ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்தது குறித்து உறவினர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்த தம்பி மகனை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியை சேர்ந்தவர் பொன்ராஜ்(55). இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊரில் இருந்து தனது குடும்பத்துடன் வந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம் படவேட்டம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தார். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். பொன்ராஜூக்கும் அவரது தம்பி அந்தோணிக்கும் இடையே தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இதனால் பொன்ராஜூம் சகோதரர் அந்தோணி மகன் அற்புதராஜ்(32) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. தனது தந்தையின் சொத்து சரியாக பிரித்து தரும்படி அற்புதராஜ் தனது பெரியப்பா பொன்ராஜிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பொன்ராஜ் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொன்ராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த தகவலை அறிந்த அற்புதராஜ், நேற்று இரவு பொன்ராஜ் வீட்டிற்கு சென்று தங்களுக்கு சேரவேண்டிய சொத்தை உடனே பிரித்து தரும்படி கூறி தகராறு செய்தார். இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொன்ராஜ் உங்களுக்கு சொத்து எதுவும் கொடுக்கமுடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அற்புதராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் பெரியப்பா பொன்ராஜை கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.பின்னர், ‘பெரியப்பா பொன்ராஜை சொத்து தகராறில் வெட்டி கொலை செய்துவிட்டேன். வந்து உடலை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அற்புதராஜ் தனது உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொன்ராஜ் உறவினர்கள் உடனே சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அற்புதராஜை செல்போன் சிக்னல் உதவியுடன் தேடி வருகின்றனர். குடும்ப சொத்து பிரச்னை காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஆர்.ஏ.புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.