சேலத்தில் உலகத்தமிழ் நீதி நீதிமன்றம் அமைப்பை உருவாக்கி ஆயுத போராட்டம் நடத்த திட்டம்: துப்பாக்கி தயாரித்த 3 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம்: சேலத்தில் துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் கைதான 3 பேர் மீதும் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் போலீசார், கடந்த மே மாதம் 19ம் தேதி, புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த சேலம் எருமாபாளையத்தை சேர்ந்த  நவீன்(எ)நவீன்சக்கரவர்த்தி (25), செவ்வாய்பேட்டையை சேர்ந்த  சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது.

இருவரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிபுரிந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர்(எ) கபிலன் என்பவரும் கைதானார். கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததால், இவ்வழக்கை சேலம் கியூ பிரிவுக்கு மாற்றினர். கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கை கடந்த ஜூலை 27ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு  (என்ஐஏ) மாற்றப்பட்டது. அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: புளியம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் 2 பேரிடம் இருந்து 2 நாட்டு கைத்துப்பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கி பவுடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன், விடுதலைப்புலிகளை போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினர். குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் சதி செய்து தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளுடன் இணைந்து ‘உலகத்தமிழ் நீதி நீதிமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குவாரிகள், கிரஷர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் வேலை செய்பவர்களை சட்டவிரோமாக துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் தாக்கி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கை தமிழ் மக்களாலும், விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாலும் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை குறிக்கும் 2022 மே 18 அன்று வேலை நிறுத்தத்தை தேர்ந்தெடுத்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத செயல்கள் மக்களிடையே அச்சத்தை பரப்பும் என்றும், விடுதலைப்புலிகள் மாதிரியான அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக புத்துயிர் பெற்று உயிர்தெழப்பட்டது என்ற வலுவான செய்தியை, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அனுப்பும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினர். மேலும் தொடர்ந்து விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: