நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நீரவ் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சிபிஐ.யின் நடவடிக்கையால் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வரும் முயற்சியில் சிபிஐ  ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான முதல் வழக்கில், நீரவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்தார். அதில், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பதாகவும், அதனால் அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதை விசாரித்து வந்த நீதிமன்றம், அவருடைய தற்கொலை மனப்பான்மை வாதத்தை நேற்று நிராகரித்தது. மேலும், இந்தியாவில் அவருக்கு எதிரான உள்ள குற்றச்சாட்டுகளையும், பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது என்றும்  தீர்ப்பு அளித்து, அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், அவர் இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து நீரவ் மோடி 14 நாட்களுக்குள் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: