தொப்பூர் கணவாய் பகுதியில் இரவு நேரத்தில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விளக்கு-இந்தியாவிலேயே முதன்முறையாக நடவடிக்கை

தர்மபுரி : தொப்பூர் கணவாய் பகுதியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில், விபத்தை தடுப்பு நடவடிக்கையாக 8 இடங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் பங்களிப்புடன் ₹2 லட்சம் மதிப்பில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.  தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் கணவாய் சுமார் 8 கி.மீ., தூரம் கொண்டதாகும்.

தமிழகத்திலிருந்து வட மாநிலத்திற்கும், வடமாநிலங்களிலிருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கும் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ள தொப்பூர் கணவாயை தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. டோல்கேட்டில் இருந்து தொப்பூர் இரட்டை பாலம் வரை, 8 கி.மீ., தொலைவிற்கு சாலை இறக்கமாகவும், வளைந்தும் செல்கிறது. தொப்பூர் கணவாயில் இருந்து 4 கி.மீ., தூரம் மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்டதாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவில் விபத்து நடைபெறும் போது, இருபுறமும் பல கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக உள்ளது.

வாகன ஓட்டிகளிடையே தொப்பூர் கணவாய் பீதியூட்டும் இடமாகவே உள்ளது. உயிர் பலியோடு, பொருட்சேதமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து, ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரதிபலிப்பான் ஸ்டிக்கர், வேகத்தடைகளும் அமைத்து வருகின்றனர்.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நவீன கருவிகள் அமைக்கப்பட்டு, அபராதம் விதித்து வசூலிக்கப்படுகிறது. ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் சாலை விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த மாதம் முதல் தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை விபத்து நடக்கும் 2 இடங்களில், ‘கோ ஸ்லோ’ என்ற வாசகத்தின் பதிவுகளை லேசர் ஒளிக்கற்றை மூலம் சாலையில் பிரதிபலிக்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விபத்து குறைந்தபாடில்லை.

 இந்நிலையில், டிவிஎஸ் நிறுவனம், ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ், தர்மபுரி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய தனியார் பங்களிப்புடன், கடந்த 18ம் தேதி ₹2 லட்சம் மதிப்பில் தொப்பூர் கணவாய் பகுதியில் 8 இடங்களில் சோலார் பிலிங்கர் எச்சரிக்கை மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. வேகம் 30 கிலோ மீட்டர் என எச்சரிக்கை செய்யும் வகையில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாய் பகுதி அபாயகரமான எஸ் வடிவ குறுகிய வளைவு சாலையாக உள்ளதாலும், சாலையில் கிரிப் தன்மை இல்லாததாலும் அடிக்கடி விபத்து நடக்கிறது. குறிப்பாக, நள்ளிரவு முதல் அதிகாலை நேரத்தில் விபத்து அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தெளிவாக தெரியும் வகையில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்தவுடன் வேகத்தை குறைப்பதன் மூலம் விபத்தினை தடுக்க முடிகிறது. சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். வெளி மாநிலங்களிலிருந்து வரும் டிரைவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்,’ என்றனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாயில், விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக தொப்பூர் கணவாயில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரவு நேரத்தில் அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, 30 கி.மீ., வேகத்தில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தனியார் பங்களிப்புடன் 8 இடங்களில் சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நடக்கும் விபத்தை கட்டுப்படுத்த, இந்த சோலார் பிலிங்கர் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: