நாடு முழுவதும் மாணவர்கள், நடிகை, நடிகர்களுக்கு சப்ளை சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் சிக்கினான்: பாஜ தலைவர் கொலையில் முக்கிய குற்றவாளி: ரூ. 100 கோடி வரை சொத்து குவித்ததும் அம்பலம்

திருமலை: நாடு முழுவதும் மாணவர்கள், நடிகை, நடிகர்கள் என 50 ஆயிரம் பேருக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்து வந்த சர்வதேச போதை கடத்தல் மன்னன் எட்வினை, ஐதராபாத் போலீசார் நேற்று முன்தினம் கோவாவில் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சில பகுதிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சந்தேகத்துக்குரிய பகுதிகளை போலீசார் கண்காணித்தனர். அப்போது, போதைப்பொருட்கள் சப்ளை செய்ததாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த பிரிதிஷ் நாராயண் போர்க்கரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவாவை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் கோவா சென்று போதை பொருட்களை சப்ளை செய்த சஞ்சய் கவேகர், ஸ்டீவ்வை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவாவை சேர்ந்த எட்வின் என்பவர், ஐதராபாத் மற்றும் கோவாவில் போதைப்பொருட்கள் சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. அவரை தேடும் குற்றவாளியாக அறிவித்து, கடந்த 3 மாதங்களாக ஐதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் முகாமிட்டு அவரை தேடினர்.

இந்நிலையில் , நேற்று முன்தினம் கோவாவில் பதுங்கியிருந்த எட்வினை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து ஐதராபாத் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ஐதராபாத் காவல் ஆணையர் சி.பி.ஆனந்த் அளித்த பேட்டியில், ‘கோவாவை சேர்ந்த எட்வின் நன்ஸ் என்கிற எட்வின் (45), 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவா ஓட்டல்களில் சர்வராக பணியாற்றி வந்தார். அப்போது, சுற்றுலா பயணிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருட்கள் உபயோகப்படுத்துவது தெரிந்ததால், போதைப் பொருள் விற்பனையில் இறங்கினார். தனது தொழிலை விரிவுப்படுத்தி நாடு முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், நடிகர்கள், நடிகைகள் என 50 ஆயிரம் பேருக்கு போதைப்பொருளை சப்ளை செய்துள்ளார். வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வந்துள்ளார். இதன் மூலம், அவர் ரூ. 100 கோடி வரை சம்பாதித்துள்ளார்.

கோவாவில் 2 எஸ்டேட், பிரமாண்டமான வீடுகள் கட்டியுள்ளார். இவர் பல்வேறு மாநிலங்களில் 600 பேரை ஏஜென்ட்களாக நியமித்து போதைப்பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்றுள்ளார். தெலங்கானாவில் மட்டும் 160 பேர் உள்ளனர்,’ என தெரிவித்தார். கோவாவில் பாஜ தலைவர் சோனாலி போகட் கொல்லப்பட்ட வழக்கிலும் எட்வின் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

Related Stories: