கோயில் எதிரே போராட்டம் நடத்தியபோது பயங்கரம் சிவசேனா மூத்த தலைவர் பஞ்சாபில் சுட்டுக்கொலை: காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயலா?

அமிர்தசரஸ்: பஞ்சாபில் கோயிலுக்கு எதிரே குப்பையில் சாமி சிலைகள் உடைத்து போடப்பட்டு இருந்ததை கண்டித்து போராட்டம் நடத்திய சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பிரபலமான கோபால் கோயிலுக்கு எதிரே உள்ள குப்பையில் சமீபத்தில் உடைத்து போடப்பட்ட சாமி சிலைகள் இருந்தன. இதை கண்டித்து, இக்கோயில் எதிரே சிவசேனா நேற்று போராட்டம் நடத்தியது. இம்மாநில சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், இக்கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, போலீஸ் அதிகாரிகள் சிலர் சுதிரை சமாதானப்படுத்த பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சுதிர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக, ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்து இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.  அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ்சேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு கும்பல் ஈடுபட்டது. அதேபோல், காலிஸ்தான் ஆதரவாளர்களால் சுதிர் சூரியின் உயிருக்கும் மிரட்டல் இருந்து வந்தது. அதனால், அவர் கொல்லப்பட்டதின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

* சுதிர் சுடப்பட்டது எப்படி?

சுதிர் எங்கிருந்து, எப்படி சுடப்பட்டார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. அவர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. காரணம், சுதிர் சுடப்பட்டதும் அவருடைய ஆதரவாளர் ஒருவர், அந்த குடியிருப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். சுதிர் சுடப்பட்டு கீழே விழுந்து கிடந்த வீடியோ வெளியாகி வைரலாகி இருக்கிறது. இதில், கொலையாளியை நோக்கி ஆதரவாளர் சுடும் காட்சி பதிவாகி உள்ளது. அதே நேரம், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘சுதிர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு வேகமாக வந்து நின்ற காரில் இருந்து 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சுதிர் உடலில் குண்டுகள் பாய்ந்து சரிந்தார்,’ என தெரிவித்தார்.

Related Stories: