ஆப்கானை வென்று அரையிறுதி வாய்ப்பில் ஆஸி

அடிலெய்டு: உலக கோப்பை முதல் பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 12 சுற்றில் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஒரு வெற்றியை கூட பெறாத ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் விளையாடியது.  அதற்கேற்ப   வார்னர் 25(18பந்து),  மார்ஷ் 45(30பந்து),  ஸ்டோய்னிஸ் 25(21பந்து), கடைசி வரை ஆட்டமிழக்காமல்  மேக்ஸ்வெல் 54(32பந்து, 6பவுண்டரி, 2சிக்சர்) விளாச ஆஸி  20ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 168ரன் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. ஆப்கான் தரப்பில்  நவீன் உல்ஹக் 3, ஃபரூக்கி 2 விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து 169ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கான்.  தொடக்க ஆட்டக்காரர் ரஹமதுல்லா 30(17பந்து)ரன், இப்ராகிம் 26(33பந்து), நயீப்   39(23பந்து)ரன் விளாசி ஆப்கானுக்கு நம்பிக்கை தந்தனர். கூடவே  ரஷித்கான்  விளாசல்,  ஆஸியை கடைசி ஓவர் வரை பதட்டத்திலேயே வைத்திருந்தது. ஆனாலும் ஆப்கான்  20ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 164ரன் எடுத்தது. எனவே ஆஸி 4 ரன்னில் வெற்றிப் பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது. ஆப்கான் ஒரு போட்டியில் கூட வெற்றிப் பெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.  கடைசி வரை களத்தில் இருந்த ரஷித்கான்  டி20 ஆட்டங்களில் தனது அதிகபட்ச ஸ்கோரான  48(23பந்து, 3 பவுண்டரி, 4சிக்சர்) ரன்னை பதிவு செய்தார். ஆஸி தரப்பில் ஸம்பா, ஹசல்வுட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: