பேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கம்; இளம்பெண்ணிடம் 9 பவுன் பறிகொடுத்த 52 வயது புரோக்கர்: கன்னியாகுமரி லாட்ஜில் தங்கி கைவரிசை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கார் புரோக்கருடன், லாட்ஜில் தங்கி இருந்த இளம்பெண், 9 பவுன் நகையை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 52 வயதான கார் புரோக்கருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் மதுரையை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் தன் பெயர் சத்யா என கூறி அறிமுகம் ஆனார். பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பு விரிவடைந்து செல்போனில் தினமும் பேசும் அளவுக்கு வளர்ந்தது. கார் புரோக்கருக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

 இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், முதுகு வலி சிகிச்சைக்காக கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என இளம்பெண்ணிடம் புரோக்கர் கூறினார். இதை கேட்டதும் அந்த இளம்பெண், நான் கன்னியாகுமரி சென்றதே இல்லை. அங்கு நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்ைத பார்க்க வேண்டும். நானும் உங்களுடன் வரட்டுமா? என கேட்டார். இதையடுத்து அவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 10.30க்கு கன்னியாகுமரி வந்து இறங்கினர். எம்.எல்.ஏ. அலுவலக சாலையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

இரவு தூங்குவதற்கு முன் தான் அணிந்திருந்த தங்க செயின், மோதிரங்களை கழற்றி, தன்னுடைய பேக்கில் புரோக்கர் வைத்திருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கண் விழித்து பார்த்த போது, அறை கதவு திறந்து கிடந்தது.  இளம்பெண்ணை காணவில்லை. பேக்கில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகையும் மாயமாகி இருந்தது. அதன் பின்னர் தான் இளம்பெண், தன்னுடன் தங்கி இருந்து 9 பவுன் நகையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இது குறித்து நேற்று காலை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கார் புரோக்கர் புகார் அளித்தார்.

போலீசாரிடம் அண்ணன், தங்கையாக தான் பழகினோம். மற்றப்படி எங்களுக்குள் வேறெதுவும் கிடையாது. அண்ணன், அண்ணன் என்று அன்போடு பேசி வந்தார்.  இப்படி ஏமாற்றி விட்டாளே என கூறி கதறினார். 52 வயதில், சின்ன பசங்க மாதிரி பேஸ்புக்கில் வந்தவளை நம்பி ஏமாந்து உள்ளீரே.. என போலீஸார் கடிந்து கொண்டு புகாரை வாங்கி, மனு ரசீது பதிவு செய்துள்ளனர். விடுதி அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: