வெள்ளிமலை அருகே ஆபத்தான நிலையில் தொங்கும் சாலை தடுப்பு கம்பிகள்-விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைதுறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் என பல்வேறு துறைகளின் கீழ் சாலைகள் உள்ளன. இதில் பெரும்பாலான சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகள் மற்றும் சாலையின் வளைவு பகுதிகளில் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வளைவு பகுதிகளை அறிந்து வாகனங்களை இயக்குவதற்கு உதவியாக இருந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைதுறையை தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் விபத்து பகுதி மற்றும் வளைவு, ஆபத்து பகுதிகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இரணியல் முட்டம் சாலையில் பல்வேறு இடங்களில் இந்த தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாலையின் உள்ள கல்படி ஆலமூடு ஜங்சனில் 3 சாலைகள் பிரியும் பகுதியில் அதிக அளவு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

கல்படி ஆலமூடு ஜங்சனில் இருந்து ெவள்ளிமலை செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ள குளத்தில் வாகனங்கள் சென்றுவிடாத வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் குளத்தின் பக்கசுவர் இடிந்து விழுந்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல சாலையோரம் உள்ள மண் குளத்தில் விழுந்து சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

இரவு வேளையில் எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது வழிவிட சாலையின் ஓரம் வாகனத்தை ஒதுக்கும்போது விபத்தில் வாகனங்கள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பி உள்ள இடத்தில் இரண்டு பேரல்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும், நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: