முதல்வன் பட பாணியில் தேர்வில் சாதித்த விழுப்புரம் மாணவிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு: நாற்காலியில் அமர்ந்து பணியாற்றினார்

விழுப்புரம்: முதல்வன் பட பாணியைப்போல், காலாண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற விழுப்புரம் மாணவிக்கு அரசுப் பள்ளியில் ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கி ஆசிரியர்கள் அங்கீகரித்தனர். பொறுப்பேற்ற  மாணவி தலைமை ஆசிரியரின் நாற்காலியில் அமர்ந்து அன்றாடப் பணிகளை மேற்கொண்டார். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வில் விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லோகிதா 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவியாக சாதனை படைத்தார்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் சேர்ந்து, அம்மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். ஒருநாள்முழுவதும் லோகிதாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கி அந்த இருக்கையில் உட்காரவைத்து உற்சாகபடுத்தினர். பின்னர், தலைமை ஆசிரியர் பொறுப்புஏற்ற லோகிதா, ஒவ்வொரு வகுப்பறையாக சென்று தலைமை ஆசிரியரைப்போல் என்ன பாடம் நடத்துகிறீர்கள் என்று  ஆசிரியர்களிடம் வினாஎழுப்பி, மாணவிகளிடமும் கல்விகற்கும் விதம் குறித்து கலந்துரையாடினார்.

மேலும், மதியஉணவு சமைக்குமிடத்திற்கு சென்று, சுகாதாரமாக சமைக்கப்படுகிறதா? உணவின்தரம் குறித்தும் மாணவி லோகிதா ஆய்வுசெய்தார். படிக்கும் பள்ளியிலேயே ஒருநாள் தலைமைஆசிரியராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக  உள்ளதாகவும், இனிவருங்காலங்களில் மேலும் தன்னை ஊக்கப்படுத்தும் என்று மாணவி லோகிதா தெரிவித்தார். என்னை பார்க்கும் மற்ற மாணவிகளுக்கும் இதுபோன்று எண்ணம் வரவேண்டும் என்றார். தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Related Stories: