கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு குறைப்பு

திருக்காட்டுப்பள்ளி: கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் செல்கிறது. இதில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில், விவசாயத்திற்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால் கல்லணை காவிரியில் வரும் அதிகப்படியான வெள்ள நீர் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது.

கடந்த வாரங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சம் கன அடிக்கு மேலான தண்ணீர் முக்கொம்பு வழியாக காவிரியிலும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு வெள்ள நீராக சென்று கொண்டிருந்தது. தற்போது கொள்ளிடத்தில் அந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து இன்று கல்லணையில் 2,055 கன அடி மட்டும் திறந்து சென்று கொண்டுள்ளது.

ஆனால் காவிரியில் விவசாயத்திற்காக 7508 கன அடி தண்ணீர் வெண்ணாறில் 8007 கன அடி தண்ணீரும் கல்லணை கால்வாயில் 2804 கனஅடி தண்ணீரும் மேலும் கோவிலடி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் பிள்ளை வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் மொத்தமாக 20,384 கனஅடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: